Sunday 31 July 2022

தம்மம் தந்தவன்

 


நூல் அறிமுகம்: தம்மம் தந்தவன்

மராட்டி மூலம்: விலாஸ் சாரங்

தமிழில்: காளிப்ராஸத்

வெளியீடு : நற்றிணை பதிப்பகம்

விலை: ரூ. 260 /-

பக்கங்கள்: 208

 

 

புத்தரைப் பற்றியும் அவரது போதனைகள் பற்றியும் ஏராளமான புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன. அதில் புத்தர் வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களும் , அவரின் உபதேசங்களும் பல வடிவங்களில் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் , அவரின் குடும்பஉறவு , பாசம்,  ஏக்கம் போன்ற உளவியல் அடிப்படை கொண்ட  நாவல் வடிவத்தில் ஒரு சில புத்தகங்கள் மட்டுமே தந்துள்ளன. இந்த நாவலுக்கு முன்பு ,  யசோதரை " என்ற மற்றொரு நாவலும் ஓல்கா என்பவரால் பெண்ணிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது.

 

இந்த நாவல், சித்தார்த்தன் என்ற ஒரு சாதரண மனிதன் , தனது தவத்தின் பயனாகவும் , ஆய்ந்துணர்வின் மூலமும்  " புத்தர் " நிலைக்கு உயர்ந்ததையும்,  அவர் கடந்து வந்த பாதையையும், அவரால் புத்தமதம் உருவான வரலாற்றையும்   கூறுகிறது.  புத்தரை ஒரு அவதார புருஷராக  சித்தரிக்கும் நூல்களுக்கு மத்தியில் அவர்  எந்த விதமான ஆரவாரமின்றி ஒரு சாதாரண மனிதனாக , சாக்கிய வம்சத்தில் சுத்தோதனருக்கும், மாயாதேவிக்கும் மகனாக  பிறந்தான் என்று விவரிக்கும் நாவல் எனக்கு மிகுந்த சுவாரசியத்தையும், ஆர்வத்தையும் கொடுத்தது.

 

மாயாதேவி , தலைப் பிரசவத்திற்காக தனது தாயின் வீட்டிற்குச் செல்லும் வழியில் ,  ஒரு வெட்ட வெளியில் , கடும் வெயிலில்,  ஒரு சாலமரத்தின் நிழலில்,  தன் தலைச்சன் குழந்தையான சித்தார்த்தனை பிரசவித்தது  மிகவும் துரதிருஷ்டமான ஒன்று தான். .  அந்தத் தாயின் வேதனையைப் புரிந்து கொள்ளவும் , அதைத் தாண்டி உலக மக்களின் துன்பத்தையும் அறிந்து கொள்வதற்கான ஒரு தேடலாகத் தான் புத்தரின்  வாழ்க்கை அமைந்துவிட்டதோ என்று நாவலாசிரியர் எழுப்பும் கேள்வி நம் மனதிலும் எழுகிறது.

சித்தார்த்தனின் எதிர்காலத்தைக் கணித்த பிராமண சோதிடர்களின் கூற்றை  நம்பாத   சுத்தோதனர் ,  காட்டில் வசித்து வரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த  தனது முன்னாள் ராஜகுரு அஜிதரை அழைத்து வரச் சொல்கிறார். அக்காலத்தில், ஒரு பழங்குடி வகுப்பைச்  சேர்ந்த ஒருவன் சோதிடக்கலையை அறிந்து வைத்திருந்தான் என்பது ஆச்சரியமான செய்தி. 

 

சித்தார்த்தனின் உடலை நிர்வாணமாக பரிசோதித்த அஜிதர் , “ இந்தக் குழந்தை அசாதாரணமான சுயதரிசனம் உடையவனாகவும் , உண்மையை நாடுபவனாகவும் விளங்குவான் . வருங்காலத்தில் , நிலையற்ற இவ்வாழ்வின் மீதான நம்முடைய எண்ணங்களையெல்லாம் தன்னுடைய நுண்ணறிவால் மாற்றுவான், இவனின் புகழ் தேசம் முழுவதும் பரவும். சொல்லப் போனால் தொலைதூரத்தில் உள்ள தேசங்களுக்குக்கூடப் பிறவும் , எண்ணிக்கையில் அடங்காத சீடர்களையும் , பின்பற்றும் மக்களையும் இவன் பெறுவான் "  என்று கூறிவிட்டு அழுகிறார்.

 

சுத்தோதனருக்கு குழப்பமாகி விடுகிறது. ஏன் அழுதீர்கள் அஜிதரே? என்று கேட்கிறார். அதற்கு " நான் இன்னும் சில நாட்களே வாழ்வேன் . உங்கள் மைந்தன் பெரும்புகளை அடையும் காலத்தில் அதைக் காண நான் இருக்கப் போவதில்லை. அதை நினைத்துத் தான் அழுதேன்" என்று பதில் கூறுகிறார். இவரைப்  போலவே கி.பி. 630 இல் இந்தியா வந்த சீன அறிஞர் யுவாங் சுவாங் , புத்தர் போதனை செய்த ஒரு குன்றின் மேல் ஏறிப் பார்வையிடும்  போது அழுதிருக்கிறார். ஏன் என்று கேட்டபொழுது , " புத்தர் பிறந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே என்று நினைத்து அழுதேன்” என்று கூறியுள்ளார் .   மிகவும் ஆச்சரியமான ஒப்பீடு!

 

சித்தார்த்தன் பிறந்த ஏழாம் நாளில் , அவனது தாய் மாயாதேவி மரணித்துப் போகிறாள்  . அவனது சிற்றன்னை பஜாபதி தான் அவனை வளர்க்கிறாள். துன்பம் எதுவும் நெருங்காமலும், மிகவும் அன்புடனும் , எச்சரிக்கையாகவும் வளர்க்கப்பட்ட  சித்தார்த்தன் , மக்கள் படும் துன்பத்தையும் , நோயையையும் , இறப்பையும் கண்டு , அதற்கான காரணத்தை அறிய , வீட்டை விட்டு  வெளியேறுவது என்பது காலத்தின் கோலம் தான்.

 

அதே போல் , திருமண பந்தத்தில் விருப்பமில்லாத சித்தார்த்தனுக்கு பிம்பாதேவி என்ற யசோதரை மனைவியாக இணைக்கப்படுகிறாள். அவர்களுக்குள் இனிய அன்பு இருந்ததாலும்,  தாம்பத்திய உறவில் சித்தார்த்தன் நாட்டமில்லாதவனாகவே இருக்கிறான். யசோதரை தவித்துப் போகிறாள் . இது சம்பந்தமாக யசோதரை கேட்கும் போது, எனக்கொரு மகன் பிறக்கும் போது நான் வீட்டை விட்டு வெளியேறி துறவியாகி  விட வேண்டும் என்ற சத்தியம் எடுத்துள்ளதாக சித்தார்த்தன் பதிலளிப்பான். அது கேட்டு யசோதரைக்கு தன் தலையில் இடி விழுந்த உணர்வு ஏற்படுகிறது.

 

அவளது இரவுகள் யாவும் வெறுமையாக கழிகிறது. அவள் ஆர்வத்துடன்  சித்தார்த்தனை நெருங்கும் போதெல்லாம், “நான் எனது உடலை  என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன் , உன் முயற்சி பலனளிக்காது “ என்று சித்தார்த்தன் கூறும் பொழுது யசோதரை அழுவாள். நமது மனம் யசோதரைக்காகப் பரிதாபப் படுகிறது.

 

இப்படியாக பனிரெண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு சித்தார்த்தன் மனம் இளகி யசோதரையுடன் கூடுகிறான்; அவள் கருவுகிறாள்.  அவர்களுக்கு ராகுலன் பிறக்கிறான் . அவன் பிறந்த அன்றே தனது சத்தியத்தின் படி சித்தார்த்தன் வீட்டை விட்டு முடிவு செய்கிறான்.  அதற்கு முன்பு தன் மகனை ஒரு முறை பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று யசோதரை இருந்த அறைக்கு சித்தார்த்தன் வருகிறான். ஆனால், யசோதரை தூங்கிக் கொண்டு இருக்கிறாள், அவளது அணைப்பில் குழந்தையும் தூங்கிக் கொண்டிருக்கிறது.    ஆகவே, குழந்தையின் முகம் தெரியவில்லை , அதனால் பார்க்காமலே வெளியேறுகிறேன்.

 

சித்தார்த்தன் வீட்டைவிட்டு வெளியேறிய போது அவனுக்கு வயது 29 .

 

சித்தார்த்தன் காடுகளில் அலையும் போது,  ஒரு இரவில் , ஒரு மரத்தடியில் படுத்திருக்கிறான். அப்போது  தனது மகனின் நினைவு வருகிறது, அன்றிரவு முழுவதும் அவர் கண்டிராத அந்த முகம் அவரை வாட்டுகிறது. அடுத்த நாள் சூரியன் உதித்த பிறகு , தீவிரமாக நடக்கத் துவங்குகிறார் . அந்த நடை அவர் இறக்கும் வரை தொடருகிறது.

 

துன்பம் குறித்தும், வலி, வேதனை குறித்தும் அறிந்து கொள்ள விரும்பிய சித்தார்த்தனுக்கு ஒரு  குருவின் வழிகாட்டுதல் தேவைப்பட்டது.  அதனால் அவன் முதலில் அலரா கலாமா  என்ற துறவியிடமும் , பின்னர் உத்தக ராமபுத்தர் என்பவரிடமும் தியானத்தையும் , யோகத்தையும் பயிலுகிறார். ஆனால் சித்தார்த்தனுக்கு எந்த திருப்தியும் ஏற்படவில்லை. அவர்களிடம் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்று உணருகிறான்..

 

அதனால் , தனியாக தவம் புரிய மகத நாட்டின் எல்லையோர கிராமமான உரூவெலாவை உகந்த இடமாக தேர்வு செய்கிறார். அங்கே, ஏழு ஆண்டுகள் கடும் தவம் புரிகிறார்; கடுமையான உண்ணாநோன்பினால் அவர் உடல் வாடுகிறது. ஆனால், அறிவுக்கண் திறக்கிறது.

 

அந்த உரூவெலா  கிராமத்தில் (  புத்த கயா ) தான் சித்தார்த்தர் தான் விரும்பிய ஒன்றை வென்றெடுத்தார்.  கி.பி. 528 ஆம் ஆண்டின் , வைகாசி மாத இரவில், முழுநிலவு நாளில் , அந்த முதிய அரசமரத்தின் அடியில் அவருக்கு ஞானம் கிடைத்தது. உலக மக்களின் துன்பத்திற்கான விளக்கம் கிடைத்தது. அதுவரை சித்தார்த்தனாக, போதிசத்துவனாக இருந்தவர் விடியும் போது " புத்தராகியிருந்தார் ".  தம்மம் பிறந்தது.

 

மகதப் பேரரசர் பிம்பிசாரர் , கோசல அரசர் பசேநதி ஆகியோர் புத்தரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். மன்னர்கள் வழியிலேயே மக்கள் என்ற அடிப்படையில் , பார்ப்பனியத்தின் பிடியில் வேதங்களுக்குள்ளும், வேள்விகளுக்குள்ளும் மூழ்கிக் கிடந்த மக்கள் புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு  ஒட்டுமொத்தமாக பௌத்தத்தைத் தழுவினார்கள். பார்ப்பனியம் ஓடி ஒளிகிறது. புத்தரின் தம்மம் இந்திய நிலப்பரப்பில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது.

 

தன் மகன் புகழின் உச்சியிலிருப்பதை அறிந்து புத்தரின் தந்தை சுத்தோதனர் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். தனது மகனைப் பார்க்க விரும்புவதாக புத்தருக்கு தகவல் அனுப்புகிறார். புத்தரும் கபிலவஸ்து வருவதாக ஒப்புக்கொள்கிறார். அங்கே புத்தருக்கு மிகப்பெரிய சோதனை காத்திருக்கிறது.

 

சுத்தோதனர், தனது மகனை துறவறத்தை விடுத்து , மீண்டும் வீடு திரும்பி ஆட்சிப் பொறுப்பை ஏற்குமாறு வேண்டுகோள் வைக்கிறார். ஆனால், புத்தர் மறுத்து விடுகிறார். யசோதரையைப் பார்த்துவிட்டுச் செல்லுமாறு சுத்தோதனர் கூறுகிறார். யசோதரை விரும்பினால் நான் அவளை சந்திக்கிறேன் என்று புத்தர் உறுதி கூறுகிறார். யசோதரையும் புத்தரை சந்திக்க விரும்புவதாகக் கூற,  யசோதரையை பார்க்க வருகிறார் புத்தர் .

 

கடந்த ஏழு ஆண்டுகளாக " வாழாவெட்டி" என்ற பட்டத்துடன் வாழ்ந்து வந்த அவரைப் பார்த்ததும் உணர்ச்சி வேகத்தில், பெரும்பாய்ச்சலுடன் அவரைக் கட்டியணைத்து முத்தமழை பொழிகிறாள் யசோதரை. கணவரின் அரவணைப்பிற்க்காக ஏங்கித் தவித்த ஒரு பேதைப்பெண்ணின் உள்ளம் அங்கே வெளிப்படுகிறது. ஆனாலும்  மனம் பேதலிக்காத புத்தர், நீ , “என் புறத் தோலைத் தவிர வேறு எதையும் தீண்டிவிடவில்லை”  என்று தெளிவான மனநிலையில் கூறுகிறார். புத்தன் , சித்தார்த்தன் ஆகவில்லை. பின்னர் , புத்தர் இராகுலனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு திரும்புகிறார். இராகுலனும் தனது எட்டு வயதில் புத்த துறவியாகிறான்.

 

சில ஆண்டுகள் கழித்து, பிம்பிசாரனை சிறையிலடைத்து விட்டு அஜாதசத்ரு மகதத்தின்  பேரரசனாகிறான். கோசல அரசர் பசேநதியிடமிருந்து , அவரது மகன் விதூதபர் ஆட்சியை கைப்பற்றுகிறான். புத்தரின் சிறந்த இரண்டு நண்பர்களும் மரணத்தைத் தழுவுகிறார்கள். ஆனாலும், புத்தமதம் செழித்தோங்குகிறது. ஏனென்றால், உலகில் உள்ள மற்ற மதங்களை ஒப்பிடும் பொழுது , பௌத்தம் மட்டுமே கடவுள், இறைவன், இறைவி பற்றிப் பேசாத ஒரே மதமாக விளங்குகிறது. நாம் கடவுள் இல்லாமலே இயங்க முடியும் என்பதை புத்தர் நிரூபித்துக் காட்டிவிட்டார். பௌத்தம், அன்பையும், கருணையும் மட்டுமே எடுத்துக் கொண்டது.

 

இந்த நிலையில் , புத்தரின் மைத்துனர் தேவதத்தன் தன்னை அடுத்த  தலைவராக அறிவிக்குமாறு அவரை நிர்பந்தம் செய்கிறான் ; ஆனால் புத்தர் மறுத்து விடுகிறார். அதனால் , புத்தருக்கு எதிராக திரும்பி புத்த மடங்களை பிரிக்க முயலுகிறான். ஆனால் அதில் தோல்வி அடைகிறான்.   ஆனாலும், தேவதத்தன் ஆரம்பித்து வைத்த பிளவுணர்ச்சி பின்னாளில் பௌத்தத்தைக் கரைத்து விழுங்கியது . எந்த நாட்டில் பௌத்தம் எழுந்து கோலோச்சியதோ, அதே நாட்டிலிருந்து துடைத்து எறியப்பட்டது வேதனையான வரலாறு.

 

தனக்குப் பிறகு , புத்தமடங்களுக்குத் தலைவராக தேவதத்தனை மட்டுமல்ல , அவரது சிறந்த சீடர்களான சாரி புத்திரரையும் , மொக்கலன்னாவையும் , ஆனந்தனையும் கூட  புத்தர் பரிந்துரைக்கவில்லை என்பது ஆச்சரியமான உண்மை.

 

கி.பி. 483 இல் , சுந்தா என்பவன் அளித்த விருந்தில் காட்டுப்பன்றியின் இறைச்சியை சாப்பிட்டதால் ( சுக்கிரமடவா என்ற இறைச்சி உணவு) , உணவு விஷமாகி,  வயிற்றுப்போக்கும் , காய்ச்சலும் ஏற்பட்டு  புத்தர்   மரணம் எய்துகிறார்.  ஒரு சாலமரத்தின் நிழலில் பிறந்து, அரசமரத்தின் அடியில் ஞானம் பெற்று, ஒரு சாலமரத்தின் அடியில் மரணித்து போகிறார் புத்தர். இந்தியாவின் ஆகச் சிறந்த மதகுருவின் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

 

இந்த நாவல் , பார்பனீயத்திற்கு எதிரான புத்தரின் செயல்பாடுகளைப் பற்றி  அதிகம் பேசவில்லை என்ற சிறு குறையைத் தவிர, புத்தரின் வாழ்க்கையை புதிய கோணத்தில் தந்துள்ளது என்பது உண்மை. நாவலை வாசித்து முடித்தவுடன், இந்தியா மீண்டும் பார்ப்பனிய கோட்பாடுகளுக்குள் நுழைந்து , மக்களை பிற்போக்குத்தனத்திற்குள் தள்ளும் இந்தச் சூழலில் " தம்மம் தந்தவன்" மீண்டெழவேண்டும் என்ற ஆவலும்  மனதிற்குள் எழுகிறது.

 

 

சு.கருப்பையா

மதுரை. 

+919486102431

 


Tuesday 18 May 2021

தமிழ் இலக்கிய மேதை - "கி.ரா " இயற்கை எய்தினார்

தமிழின் மாபெரும் இலக்கிய மேதை  "கி.ராஜநாராயணன்  " அவர்கள் 18/05/2021 ந்தேதி வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அவரது எழுத்தை நெஞ்சினில் சுமந்து கனத்த இதயத்துடன் அவருக்கு விடை கொடுக்கிறோம். 


பிறப்பு: 16/09/1923
இறப்பு: 18/05/2021





கி ரா வின்  படைப்புகள் :

1. அகராதி:

கரிசல் வட்டார வழக்கு அகராதி

2. சிறுகதைகள்:

கன்னிமை
மின்னல்
கோமதி
நிலை நிறுத்தல்
கதவு(1965)
பேதை
ஜீவன்
நெருப்பு (புதினம்)
விளைவு
பாரதமாதா
கண்ணீர்
வேட்டி
கரிசல்கதைகள்
கி.ரா-பக்கங்கள்
கிராமிய விளையாட்டுகள்
கிராமியக்கதைகள்
குழந்தைப்பருவக்கதைகள்
கொத்தைபருத்தி
புதுவை வட்டார நாட்டுப்புறக்கதைகள்
பெண்கதைகள்
பெண்மணம்
வயது வந்தவர்களுக்கு மட்டும்
கதை சொல்லி(2017)
மாயமான்
குறுநாவல்
கிடை
பிஞ்சுகள்

3. நாவல்:

கோபல்ல கிராமம்
கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாடமி விருது பெற்றது)
அந்தமான் நாயக்கர்
கட்டுரை
ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?
புதுமைப்பித்தன்
மாமலை ஜீவா
இசை மகா சமுத்திரம்
அழிந்து போன நந்தவனங்கள்
கரிசல் காட்டுக் கடுதாசி

4. தொகுதி:

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்

5. திரைப்படமாக்கப்பட்ட இவர் எழுத்துக்கள்:

ஒருத்தி (கிடை என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு அம்சன் குமார் இயக்கிய திரைப்படம்).

(தகவல்: விக்கிப்பீடியா )






Sunday 3 January 2021

தூப்புக்காரி- நாவல்

 

சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்ஹார்  விருது பெற்ற நாவல்

நூல் ஆசிரியர்: மலர்வதி

வெளியீடு : மதி வெளியீடு

விலை: ரூ .  120

 


 

தூப்புக்காரி ... ஒரு துப்புரவுத் தொழிலாளியின் கதை.

 

தூப்புக்காரியான கனகத்தின் மகள் பூவரசியும் , சூழ்நிலை நிர்பந்தத்தின் காரணமாக  தூப்புக்காரியாகவே வாழ  வேண்டிய சூழலை இந்தச்சமூகம் அவளுக்கு கொடுக்கிறது என்பதை மிகவும் எதார்த்தமாக சொல்லியிருக்கிறார் மலர்வதி.

 

தோட்டிகளின் வாழ்க்கையை பேசிய தகழியின் " தோட்டியின் மகன் ", அறிவழகனின் " கழிசடை" ஆகிய  நாவல்களின் தொடர்ச்சியாகவே இந்த நாவலைப் பார்க்கிறேன். ஆனால் அந்த நாவல்கள் சொல்லாத பெண்மனத்தை இந்த நாவல் சொல்கிறது. நேசித்தவனை கரம்பிடிக்க முடியாமலும் , அரவணைத்தவனை இழந்தும் வலிகளைச் சுமந்த   பூவரசி , ஒரு வலிமையான பெண்ணாக உருமாறுகிறாள். 

 

கனகம் , பூவரசி , ரோஸ்லின் மற்றும் மாரி என்ற பாத்திரப் படைப்புகளின்  மூலம்  துப்புரவுத் தொழிலாளிகளின் துயர வாழ்க்கையை நம் மூளைக்குள் செலுத்து விடுகிறார் மலர்வதி. குறிப்பாக , மாரி மலக்குழிகளுக்குள் இறங்கும் போதும்  , கழிவறைகளில்  மலத்தை சுத்தப்படுத்தும் போதும் ஏற்படும் நாற்றம் நமது நாசித்துவாரத்திற்குள் நுழைந்து விடுகிறது. மலர்வதியின் வார்த்தைகளில் உயிர் இருப்பதை உணரமுடியும்.

 

நாடார் சாதியைச் சேர்ந்த கனகம் , தனது கணவனின் மருத்துவச்செலவிற்காக ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக அந்த மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக சேருவதும், அவளுடைய மருத்துவச் செலவினை அடைக்க பூவரசியும் துப்புரவுத் தொழிலாளியாக மாறுவதும் விளிம்புநிலை மக்களின் துயரத்தை வெளிப்படுத்துகிறது. சக்கிலியனான மாரி , தன் பெண்ணைக் கேட்டதற்காக வருந்தும் கனகம், பிறகு தங்களுக்கு   அவனே துணை என்று புரிந்து கொண்டு  ஏற்றுக் கொள்ளும்  போது உயர்ந்து நிற்கிறாள்.   

 

மனோவிற்கும் , பூவாரசிக்குமான காதல் இயல்பாக வந்து , அவர்கள் இணைந்து , பின்பு உதிர்ந்து விடுகிறது. அழகான மனோவின் மீது ஏற்பட்ட காதலால் பூவரசிக்கு அழுக்கானவனாகத் தெரியும் மாரி , மனோ கைவிட்டதும் ,  அவளை ஏற்றுக்கொள்ளும் போது  மனதில் , செயலில் பேரழகனாக உயர்ந்து நிற்கிறான்.  .

 

மாரியே, இந்த நாவலுக்கு உயிர் கொடுக்கிறான்.

 

காதலனால் கைவிடப்பட்டு கர்ப்பவதியாகி கலங்கி நிற்கும் பூவரசியின் குழந்தைக்கு தந்தையாகி   ,அவளை ஏற்றுக் கொள்ளும் போது நாம் நெகிழ்ந்து விடுகிறோம்  . அந்தக் குழந்தையை , நன்றாக படிக்க வைத்து கழிவுகளை நீக்கும் இயந்திரம் கண்டுபிடிக்க வைத்து , தம் போன்ற துப்புரவுத் தொழிலாளிகளின் இழிந்த வாழ்க்கையை போக்குவோம் என்று வைராக்கியம் கொள்வது அவனின் அழகான கனவு. ஆனால் , கனவு நிறைவேறாமலே மரித்துப் போகிறான் மாரி .

 

மாரியின் இறப்பு பூவரசிக்கு துன்பத்தைத் தந்தாலும் , அவனது தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளின் மூலம்  அவள் வாழ்கிறாள்; அவனது கனவை நினைவாக்கும் விதமாக தமது மகளை வளர்க்க வேண்டும்  என்று உறுதி  கொள்கிறாள். 

 

இந்த நாவல் என்னுள் மறைந்திருந்த பல நினைவுகளை கிளறிவிட்டு வேதனையை உருவாக்கிவிட்டது .  1985  ஆம் ஆண்டில் , நான்  பணிபுரிந்த ஒரு நடுத்தரமான கிராமத்தில் நவீன கழிப்பறைகள் கிடையாது;  மலத்தை கையில் எடுத்து சுத்தப்படுத்தும் கழிப்பறைகளே  இருந்தது. தினமும், காலை வேளையில் , துப்புரவுப் பணியாளர்கள் வீட்டின் பின்புறமாக வந்து , ஐயா, " தோட்டி வந்திருக்கிறேன்" என்று சத்தம் கொடுத்து மலத்தைக் கூடைகளில்  அள்ளிக்  கொண்டு செல்வதும் , சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று கூக்குரலிட்டதும் ஞாபகம் வந்து என் காதுகளுக்குள் இப்போது வலிகளைத் தருகிறது.  அந்த குரல்கள் கனகத்தின் குரலாகவே எனக்குத் தெரிகிறது.

 

இது ஒரு காத்திரமான தலித் நாவல் என்று எழுத்தாளர் பொன்னீலன் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார். இதை நான்  கடுமையாக மறுக்கிறேன். எழுத்தில் , தலித் இலக்கியம் , தலித் எழுத்தாளர்கள் என்றெல்லாம் எதுவுமில்லை. அப்படி அழைப்பது அவர்களை கீழ்சாதியைச் சேர்ந்தவர்கள் என்று சுட்டிக்காட்டுவதாகவே நான் உணருகிறேன். அப்படியென்றால், எழுத்தாளர்களின் சாதியை அடையாளப்படுத்தும் விதமாக இது பிராமணிய இலக்கியம்;  இது முதலியார் இலக்கியம்; இது வேளாளர் இலக்கியம் ; பிள்ளைமார் இலக்கியம்,  மற்றும் நாயக்கர் இலக்கியம்  என்று பெயரிட்டு அளிப்பதில்லையே ஏன்? . தலித் இலக்கியம் என்று அழைப்பதும் , ஒரு வகையில் சாதியத்தின் வெளிப்பாடு தான் என்று நம்புகிறேன்.

 

மலர்வதி, இந்த நாவலின் மூலம் " துப்புரவுத் தொழிலாளிகள்" என்ற விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் என்று உறுதியாக கூறலாம். அவர்களின் நலவாழ்விற்கான திட்டத்தை மாரியின் மூலம் நேர்மறையாக  பேசுகிறார்.

 

மலர்வதியின் வார்த்தையிலிருந்து சொல்வதென்றால், " இந்த ஒலகத்தைச் சுத்தப்படுத்துறதுனாலே தானே நீ அழுக்காகி போகிற. சாக்கடையில எறங்கி, எறங்கி நாத்தம் பிடிச்சி போறியே , ஓங்காலில் யாரங்கிலும் இன்னிக்கும் வரைக்கும் விழுந்துருப்பாங்களா மாரி. மதிப்புமிக்க ஒன் பாதங்களை யாராவது தொட்டங்களா.  இந்த ஒட்டு மொத்த ஒலகம் சார்பா ஓங்காலில் நான் விழுறேன்னு நினைச்சுக்க. ஒதுக்கி ஒதுக்கி அழுக்கன் அழுக்கன் என புறந்தள்ளி போட்டிருக்கே முழு உலகம் சார்பா ஒங்காலிலே விழுறேன்னு நினைச்சிக்க .." அவரின்   வார்த்தைகளில் வசீகரம் இருக்கிறது; கவித்துவம் இருக்கிறது ; போலித்தனம் இல்லை, சொல்வதை தெளிவாகச் சொல்கிறார்.  அதனால் , தமிழ் இலக்கிய உலகில் இவருக்கான தனித்த  இடம் காத்திருக்கிறது. 

 

தூப்புக்காரி.. உங்களை அழவைக்கிறாள் ; சிந்திக்க வைக்கிறாள்; மனதை பக்குவப்படுத்துகிறாள்.

 

 

சு.கருப்பையா

Skaruppaih.bsnl@gmail.com

+919486102431